உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் முதல் முறையாக பைனலில் மோத உள்ளன. இதுவரை இந்த அணிகள் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்த உலக கோப்பை போட்டியின் அரையறுதியில், இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை நியூசிலாந்து, அதிர்ஷ்டவசமாக வென்று பைனலுக்கு முன்னேறி விட்டது. அதே போன்று, மற்றொரு அரையிறுதியில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கி அபார வெற்றி பெற்று கெத்தாக பைனலுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து .
கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து, இதுவரை கோப்பை வென்றதில்லை என்ற சோகத்தில் இருந்து வந்தது.1979, 1987, 19923 ஆகிய 3 தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இங்கிலாந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டு விட்டது.இந்த முறை சொந்த மண்ணில், உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் உற்சாகமாக களமிறங்கும் இங்கிலாந்து அணி, இந்த முறை கோப்பையை வென்றே தீருவது என்ற வெறியில் உள்ளது எனலாம்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற, அந்த அணியின் வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இணைந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். முந்தைய உலக கோப்பை தொடர்களில் பங்கேற்ற 101 வீரர்களில் தற்போது உயிருடன் உள்ள இயான் போத்தம், கிரஹாம் கூச், ஆண்ட்ரூ ஸ்டிராஸ் உள்ளிட்ட 74 பேர், கமான் பாய்ஸ்... இந்த பைனல் உங்களுக்கானது மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தேசத்திற்கானது.. சாதித்துக் காட்டுங்கள் என்று ஊக்கப்படுத்தியுள்ளனர்.
நியூசிலாந்து அணியும் இதுவரை கோப்பை வென்றதில்லை. கடந்த 2015-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை பறிகொடுத்த சோகத்தில் உள்ள நியூசிலாந்து, அரையிறுதியில் இந்தியாவை எதிர்பாராதவிதமாக வென்ற கூடுதல் சந்தோஷத்துடன் களமிறங்குகிறது. அந்த அணியில் 2015 உலக கோப்பை பைனலில் களம் கண்ட வில்லியம்சன், ராஸ் டெய்லர், கப்டில் போன்ற அனுபவ வீரர்கள் இன்று தங்கள் திறமையையும், அனுபவத்தையும் வெளிப்படுத்த தவற மாட்டார்கள் என்பது நிச்சயம். எப்படி இருந்தாலும், இந்த இரு அணிகளில் வெற்றி பெறும் அணி, முதல் முறையாக கோப்பை வென்ற அணி என்ற சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.