சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி : மே.இ.தீவுகளை வென்றது இந்தியா

Virath Kohlis century helps India to win 2nd ODI against WI

by Nagaraj, Aug 12, 2019, 10:18 AM IST

மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லியின் சதம், புவனேஷ்குமாரின் அபார பந்துவீச்சு கைகொடுக்க, 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

மே.இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியது. அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. கயானாவில் நடைபெற்ற முதல் போட்டி மழையால், மொத்தமே 13 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் பாதியில் கைவிடப்பட்டது.

2-வது ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித்-தவான் ஜோடி களமிறங்க முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காட்ரெல் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் தவான் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் கோஹ்லி, ரோகித்து டன் ஜோடி சேர்ந்தார். கோஹ்லி அதிரடி காட்டி விறுவிறுவென ரன்களை சேர்க்க, ரோகித்தோ வழக்கத்துக்கு மாறாக மிகவும் பொறுமையாக ஆடி பந்துகளை வீணடித்தார். 34 பந்துகளில்18 ரன்கள் மட்டுமே எடுத்து ரோகித் அவுட்டானார்.
ரிஷாப் பான்ட் (20) சோபிக்கவில்லை. அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்து கலக்கல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் தனது 42-வது சதத்தை பதிவு செய்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் தன்பங்கிற்கு அரை சதமடித்தார். கோஹ்லி 120 ரன்களில் அவுட்டாக, ஸ்ரேயாஸ் ஐயரும் 71 ரன்களில் நடையை கட்டினார். கடைசி நேரத்தில் கேதர் ஜாதவ் (16) புவனேஷ்வர் குமார் (1) ஏமாற்ற, இந்திய அணி 50 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 279 ரன்கள் எடுத்தது. ரவிந்திர ஜடேஜா (16), முகமது ஷமி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மே.இ.தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் லீவிஸ் களம் இறங்கினர். கிறிஸ் கெயிலுக்கு இந்தப் போட்டி 300-வது ஒரு நாள் போட்டியாகும்.300 போட்டிகளில் விளையாடும் முதல் மே.இ.தீவுகள் வீரர் என்ற சாதனையுடன் களமிறங்கிய கெய்ல், 11 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்ததாக களம் இறங்கிய ஷாய் ஹோப்பும் 5 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினார்.12-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, மே.இ.தீவுகளுக்கு வெற்றி இலக்கு 270 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் புவனேஷ்குமார், முகமது ஷமி ஆகியோரின் அபார பந்துவீச்சில் 42 ஓவர்களில் 210 ரன்னுக்கு வெ.இண்டீஸ் ஆல் அவுட்டாக, இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்களும், கரீல், ஜடேஜா தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நாளை மறுதினம் நடைபெறும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வென்றால் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது.

இந்தப் போட்டியில் 42-வது சதமடித்த கேப்டன் கோஹ்லி, புதிய சாதனைகளை படைத்தார்.11406 ரன்கள் குவித்துள்ள கோஹ்லி, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் கங்குலியை (11,363) முந்தி, 8வது இடத்துக்கு முன்னேறினார். அதே போல் மொத்தம் 2032 ரன்கள் எடுத்து மே.இந்திய தீவுகளுக்கு எதிராக 2000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் பாக்.வீரர் மியாண்டட் 1930 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

You'r reading சாதனை மேல் சாதனை படைக்கும் கோஹ்லி : மே.இ.தீவுகளை வென்றது இந்தியா Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை