இந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில்

Ind vs WI final ODI, Chris Gayle scores quick 72 runs of 41ball in his careers final match

by Nagaraj, Aug 14, 2019, 22:41 PM IST

இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கிறிஸ் கெயிலும், லூயிசும் இந்திய பந்து வீச்சை சிதறடித்து சிக்சர் பவுண்டரிகளாக விளாசி, 10 ஓவரில் 114 ரன்களை குவித்தனர்.

மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஆடியது. 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடி வருகிறது. கயானாவில் நடந்த முதல் ஒரு நாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது.போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த 2-வது போட்டியிலும் மழை குறுக்கீடு செய்தது. ஆனாலும் டக்வொர்த் லீவிஸ் முறையில் 56 ரன்கள் வித்தியாகத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதன் மூலம்
1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மே.இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயிலும், லூயிசும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர்.

இந்திய பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர், சமி, கலீல் அகமது ஆகியோரின் பந்துகளை அனாயாசமாக சிக்சர்' பவுண்டரிகளாக இருவரும் பறக்க விட்டனர். கிறிஸ் கெயில் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 10 ஓவர்களில் இருவரும் 115 ரன்களை குவித்தனர்.

வேகப்பந்து வீச்சு எடுபடாததால் இவர்களின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த சுழல்பந்து வீச்சாளர் சகாலை அழைத்தார் கேப்டன் கோஹ்லி. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. 29 பந்துகளில் 43 ரன் குவித்த லூயிஸை சகால் ஒரு வழியாக வெளியேற்றினார். கலீல் அகமது வீசிய அடுத்த ஓவரிலேயே கெயிலும் அவுட்டானார்.41 பந்துகளில் 72 ரன்களை ( 5 சிக்சர், 8 பவுண்டரி) விளாசியிருந்த கெயில் அவுட்டானவுடன் தான் இந்திய வீரர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி கிடைத்தது. அதிரடிக்கு பெயர் போன கிறிஸ் கெயிலுக்கு இதுதான் கடைசி போட்டி . இன்றைய போட்டியுடன் ஓய்வு பெறும் 39 வயதான கெயில், தனது கடைசி போட்டியிலும் தனது அதிரடி முத்திரையை பதித்தார் என்றே கூறலாம்.

கெயில், லூயிஸ் ஆகியோர் அவுட்டான பின்னர் மே.இ.தீவுகளின் சாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் ஜோடி மந்தமான ஆட்டத்தை ஆடி வருகின்றனர். சகால் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் அபாரமாக பந்து வீசி மே.இ.தீவுகளின் ரன் வேகத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த அந்த அணி 22 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.மே.இ.தீவுகள் வென்றால் தொடர்
1-1 என சமனில் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading இந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : தனது கடைசி போட்டியில் காட்டடி தர்பார் காட்டிய கெயில் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை