மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா இன்று மோது கிறது. டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி மேல் வெற்றி பெற்றது போல், கிங்ஸ்டனில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும் சாதித்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா தெம்பாக களமிறங்குகிறது.
மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒரு போட்டி ரத்தான நிலையில், 2-0 என்ற கணக்கில் வென்று சாதித்தது.
தற்போது, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்டில் 318 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்த இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் இன்று தொடங்குகிறது.
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாகும். ஆன்டிகுவாவில் நடந்த முதல் டெஸ்டில், வேகப்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மா (8), பும்ரா (6), முகமது ஷமி (4) ஆகிய 3 பேர் மட்டும் இரு இன்னிங்சிலும் மே.இ.தீவுகளை ஆல் அவுட் செய்து 18 விக்கெட்டுகளை அள்ளினர். இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தக் கூட்டணியின் மிரட்டல் தொடரும் பட்சத்தில் இந்திய அணி தொடரை முழுமையாக வென்று வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பும் என நம்பலாம்.
இன்றைய டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கேப்டன் கோஹ்லி, புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகள் தேடித் தந்த கேப்டன்கள் வரிசையில் தோனியை (60ல் 27) முந்தி, கோஹ்லி முதலிடம் பிடித்து சாதனை படைக்கலாம். தோனி 60 போட்டிகளில் கேப்டனாக இருந்து 27-ல் வெற்றி தேடித் தந்துள்ளார். ஆனால் கோஹ்லியோ, 47 போட்டிகளில் 27-ல் வெற்றி தேடித் தந்து தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.