இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்று இருந்தன.
இந்நிலையில், நேற்று செஞ்சூரியன் மைதானத்தில் ஆறாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன் படி முதலில் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
தென் ஆப்பிரிக்கா அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகப்பட்சமாக க்யா ஜோன்டா 54 ரன்களும், ஆன்டிலே பெலுக்வாயோ 34 ரன்களும், டி வில்லியர்ஸ் 30 ரன்களும் எடுத்தனர். அந்த கடைசி 69 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 15 ரன்களும், ஷிகர் தவான் 18 ரன்களும் எடுத்து வெளியேறினார்.
ஆனால், பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 36 பந்துகளில் அரைச்சதம் விளாசிய விராட் கோலி, 82 பந்துகளில் தனது 35ஆவது சதத்தை நிறைவு செய்தார்.
இறுதியில் விராட் கோலி 96 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக ரஹானே 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதன் மூலம் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. விராட் கோலி ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஜொலித்தார்.