இந்திய அணிக்கு ஆல்- ரவுண்டராக ஹரித்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டது அதிர்ஷ்டம் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. நாளை இறுதி டி20 போட்டி நடைபெறவுள்ளது.
அதே நேரம் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 93 ரன்கள் அதிரடியாக எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் மட்டுமே எடுத்தார். மற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களில் முறையே 15, 6, 0, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். மூன்று டெஸ்ட் போட்டிகளில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதற்கிடையில் ஹர்த்திக் பாண்டியாவை முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் உடன் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். ஆனால் சிலர், கபில்தேவ் உடன் ஹர்த்திக் பாண்டியாவை ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி முன்னாள் வீரர் ரோஜர் பின்னு பாண்டியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அவர், “இந்திய அணிக்கு ஆல்- ரவுண்டராக ஹரித்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டது அதிர்ஷ்டம் தான். பேட்டிங்கில் அவர் எந்தவித பங்களிப்பையும் செலுத்தவில்லை. ஒன்றிரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துவதால் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஒரு பேட்ஸ்மேனாக கபில்தேவ் இப்படி விளையாடவில்லை. முதல்தர போட்டிகளில் சதங்கள் விளாசிய பிறகே சர்வதேச அணியில் இடம் பிடித்தார். ஆனால் பாண்டியா உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்களை எடுக்காமலே டாப் லெவலில் இடம் பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டை வைத்து அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைத்துள்ளது.
குறைந்தபட்ச ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் வடிவத்திற்கும், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. டி20 கிரிக்கெட்டில், நிறைய ரன் எடுக்கலாம். காரணம் களவியூகம் பரவலாக இருக்கும். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலே கூட அதிகம் விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.