மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பவுலர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இது அவரது 2வது ஹாட்ரிக் சாதனையாகும்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அந்த அணி வந்துள்ளது. இதில், டி20 தொடரில் 2-1 என்ற வெற்றியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது,
இதையடுத்து, 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகபட்டினத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெற 388 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் எவின் லீவிஸ் 30 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஹெத்மயர், சேஸ் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஹோப் மற்றும் பூரான் ஜோடி அதிரடியாக ஆடியது.
பூரான் 75 ரன் எடுத்திருந்த போது ஷமி பந்தில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய போலார்டும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், குல்தீப் யாதவ் 33-வது ஓவரை வீசினார். அவரது சுழற்பந்து வீச்சில் அந்த ஓவரின் 4வது பந்தில் 78 ரன்கள் எடுத்திருந்த ஹோப் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹோல்டர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அல்ஸாரி ஜோசப் விக்கெட்டையும் 6-வது பந்தில் வீழ்த்தி குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இதன்மூலம், குல்தீப் யாதவ் இன்னொரு புதிய சாதனையும் படைத்தார். இந்திய பவுலர்களில் 2 முறை ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர் என்ற சாதனைதான் அது. அவர் ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 2017-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் ஹாட்ரிக் சாதனை புரிந்திருந்தார்.