இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் கலக்கி வருகிறார். சொந்த மண்ணில், அண்டை நாடுகளை வீழ்த்துவது மட்டுமல்லாமல், அன்னிய நாட்டிலும் வெற்றிகளை குவிக்கத் தொடங்கியிருக்கிறது கோலி தலைமையிலான இந்திய அணி.
குறிப்பாக, முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது இந்தியா. கிரிக்கெட் ரசிகர்கள் பார்வை முழுவதும் கோலி மீதும் இந்திய அணி மீதும் இருக்கும் இந்நேரத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் கோலிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
கோலி குறித்து அவர் பேசுகையில், `தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின் போது கோலியை கவனித்து வந்தேன். அதில், அவர் கொஞ்சம் அதீதமாகவே நடந்து கொண்டார். ஒரு கேப்டனாக கோலி இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவர் ஆவேசத்துடன் விளையாடுவதை கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், அவர் அப்படி விளையாடியே பழக்கப்பட்டு விட்டார். அவர் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய அணியில் எல்லோரும் அவரைப் போன்று விளையாடுவதில்லை. உதாரணத்திற்கு, ரஹானே, புஜாரா போன்றோர்கள் மிகவும் சாந்தமாகவும் அமைதியாகவும் களத்தில் இருப்பவர்கள்.
அவர்களையும், தன்னைப் போல நினைத்து கோலி நடத்தக் கூடாது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி, முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று கோலி கருதுகிறார்’ என்று மூத்தவராக கோலிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் வாக்.