ஐ.பி.எல் போட்டிகளின் தலைமை வீரர்களாகத் தமிழக வீரர்கள் பதவியேற்பது தமிழகக் கிரிக்கெட் ரசிகர்களிடேயே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் நிறைவடைந்து தற்போது அணி வீரர்களுக்கான வரிசை மற்றும் தலைமை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2018-ம் ஆண்டுக்கான 11-வது ஐ.பி.எல் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த வகையில் முக்கிய வீரர்கள் பலர் தங்கள் வழக்கமான அணிகளை விடுத்து வெவ்வேறு அணிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனால், ஒவ்வொரு அணியின் நட்சத்திர வீரர்களின் வரிசையில் கூட மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ்' அணியின் கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. நடிகர் ஷாருக்கான் அணியின் நட்சத்திரக் கேப்டன் காம்பிரின் இடத்தை தினேஷ் கார்த்திக் நிரப்ப களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்குத் துணைக் கேப்டனாக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் 'கிங்ஸ் லெவன் பஞ்சாப்' அணியின் கேப்டனாக முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அஷ்வின் நியமிக்கப்பட்டார். இந்த வகையில் ஐ.பி.எல் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய இரு அணிகளின் கேப்டன்களாக தமிழக வீரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தமிழகக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.