இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வடோதராவில் இன்று தொடங்குகிறது.
இது குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனைகளில் ஒருவரான ஹர்மன்ப்ரீத் கௌர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கையாளப் போகும் யுக்தியைப் பற்றிப் பேசியுள்ளார். இந்திய மகளிர் அணி, சமீப காலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வெற்றிகளை குவித்து வருகின்றன.
இதனால், அவர்களுக்கு நல்ல ஊடக வெளிச்சமும் கிடைத்து வருகிறது. கடந்த மாதம் கூட, தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அந்நாட்டை ஒருநாள் தொடரில் வெற்றி கண்டு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மிகவும் பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது இந்திய அணி.
இந்நிலையில் இந்தத் தொடர் குறித்து கௌர், `தோல்வி மற்றும் வெற்றி என்பது விளையாட்டில் மிக சகஜமானது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்தான் கவனம் இருக்கிறது. ஆஸ்திரேலிய தொடர் மிகவும் சவால் நிறைந்தது. அதை வெல்வதற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர வேண்டும். எங்களைப் பொறுத்தவரையில், ஒரு குறிப்பிட்ட வீராங்கனை மீது கவனம் குவிக்காமல், மொத்த ஆஸ்திரேலிய அணியையும் ஒரே மாதிரி எதிர்கொள்ள வேண்டும் என எத்தனித்துள்ளோம்’ என்றார் நம்பிக்கையுடன்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com