ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெர்த்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகப்பட்சமாக டேவிட் வார்னர் 63 ரன்களும், பான்கிராஃப்ட் 38 ரன்களும் எடுத்தனர். டேவிட் வார்னர் தவிர மற்ற யாரும் அரைச் சதத்தை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா அபாரமாக பந்துவீசினார். அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 382 ரன்கள் குவித்தது. 67 ரன்களுக்குள் முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தாலும், ஹசிம் அம்லாவும், டீன் எல்கர் இருவரும் இணைந்து 88 ரன்கள் எடுத்தனர். ஹசிம் அம்லா 56 ரன்களும், டீன் எல்கரும் 57 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அதன் பின் டி வில்லியர்ஸ் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 146 பந்துகளில் 20 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 126 ரன்கள் குவித்தனர். கடைசி கட்டத்தில் பிலாந்தர் 36 ரன்களும், கேஷவ் மஹாராஜ் 30 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட், மார்ஷ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணியும் தொடர்ந்து சொதப்பலாக ஆடியது. அதிகப்பட்சமாக உஸ்மான் கவாஜா 75 ரன்களும், ஷேன் மார்ஷ் 45 ரன்களும் எடுத்தனர். மற்ற எவரும் 30 ரன்களை தாண்டவில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலும் தென் ஆப்பிரிக்கா வீரர் ரபாடா அபாரமாக பந்துவீசினார். அவர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 101 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று இருந்தது. தென் ஆப்பிரிக்கா பெற்ற இந்த வெற்றியால் தொடர் சமன் ஆகியுள்ளது.
ரபாடா உலக சாதனை:
இந்த டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்டுகளை ரபாடா கைப்பற்றினார். இதனையும் சேர்த்து ரபாடா 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், குறைந்த வயதிலேயே 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். ரபாடாவிற்கு தற்போது 22 வயதாகிறது.
இதற்கு முன்னர் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் 23 வயதில் 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையைப் படைத்து இருந்தார்.
மேலும் இந்த போட்டியில் அவர் கைப்பற்றிய 6 விக்கெட்டுகளில் இறுதி 5 விக்கெட்டுகளை [ஷேன் மார்ஷ், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்] கைப்பற்ற 18 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார்.
மேலும் செய்திகளை படிக்க: thesubeditor.com