சுரேஷ் ரெய்னாவின் மாமாவைக் கொள்ளையர்கள் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனாலேயே அவர் ஐபிஎல்லில் விளையாடாமல் இந்தியா திரும்பியுள்ளார்.பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டின் தரியால் கிராமத்தில் ரெய்னாவின் மாமா வீடு இருக்கிறது. சில நாட்களுக்கு முன் அங்கு மீது மர்மநபர்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்துவிட்டார். இந்த கொலையை யார் செய்துள்ளார்கள் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, ``எங்கள் குடும்பத்துக்கு நடந்தது கொடூரத்தின் உச்சம். என் மாமா கொலை செய்யப்பட்டார், அவரின் இரண்டு மகன்களுக்கும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துவிட்டார். என் அத்தை வெண்ட்டிலேட்டர் உதவியுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் இவ்வளவு நடந்துவிட்டது. ஆனால் இப்போது வரை அன்று இரவு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. பஞ்சாப் போலீஸார் இந்த விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கொடூரமான காரியத்தைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும். இவர்களை விட்டுவிட்டால் பலபேருக்கு இதுபோன்ற கொடூரங்கள் நிகழக் கூடும்" என்று ரெய்னா கூறியிருந்தார்.
இதற்கிடையே, ரெய்னாவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா. ``ரெய்னாவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். நாங்கள் உங்கள் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம். இதயமற்ற கொடூரமான அந்தக் குற்றவாளிகள் நீதிக்கு முன் நிற்கவைக்கப்பட வேண்டும். உங்கள் மன வலிமைக்காகவும், அமைதிக்காகவும் என் பிரார்த்தனைகள்" என கூறியுள்ளார்.