மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் பந்து வீசும் முறை குறித்து மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே, பல முறை இந்த சர்ச்சையில் சிக்கிய நரேனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடரில், லாகூர் கோலாண்டர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் சுனில் நரேன். அந்த அணிக்காக அவர் பங்கெடுத்த நேற்றைய போட்டியில் ஐசிசி விதிமுறைகளுக்கு புறம்பாக பந்து வீசினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த குற்றச்சாட்டு குறித்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஐசிசி-யன் விதிப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது. சுனில் நரேன் ஏற்கெனவே, 2014 மற்றும் 2015 ஆகிய ஐபிஎல் தொடர்களில் இதைப் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கி, வெறும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார்.
2015-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் விளையாடிய போட்டியின் போதும் விதிமுறைகளுக்குப் புறம்பாக பந்து வீசினார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். பின்னர் 2016-ம் ஆண்டு இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.