இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 58 ரன்களுக்கள் சுருண்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி மோசமான பேட்டிங்கை ஆடியது. தொடக்க வீரர்கள் அலஸ்டைர் குக் 5, ஜோ ரூட் 0, டேவிட் மலன் 2, மார்க் ஸ்டோன்மேன் 11, பென் ஸ்டோக்ஸ் 0, ஜானி பைர்ஸ்டோ 0, மோயின் அலி 0, கிறிஸ் வோக்ஸ் 5 என அடுத்தடுத்து வெளியேறினர்.
ஆனால், கிரயக் ஓவர்டன் கடைசி நேரத்தில் சிறிது அதிரடி காட்டினார். ஆனால், அவருக்கு ஒத்துழைக்க யாரும் இல்லை. அடுத்து வந்த ஸ்டூவர்ட் பிராட் 0, ஜேம்ஸ் ஆண்டர்சன் 1 என வெளியேற 58 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல்-அவுட் ஆனது. கிரயக் ஓவர்டன் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட 33 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து வீரர்கள் வருவதும் போவதுமாக அணிவகுப்பு மட்டுமே நடத்தினர். அந்த அணியில் இருவர் மட்டுமே இரண்டு இலக்கத்தை தொட்டனர். 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர். மொத்தம் அந்த அணி 20.4 ஓவர்களை மட்டுமே சந்தித்துள்ளது.
நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்துவீசினர். அந்த அணியில் ட்ரெண்ட் போல்ட் 10.4 ஓவர்களை மட்டுமே வீசி 32 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 10 ஓவர்கள் வீசி 25 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இரண்டு பேர் மட்டுமே பந்துவீசினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.