பென் ஸ்டோக்ஸுக்கு யுவராஜ் கொடுத்த பதில் என்ன தெரியுமா?

by SAM ASIR, Oct 8, 2020, 12:28 PM IST

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸின் ட்விட்டர் பதிவுக்கு இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் வேடிக்கையாக பதிலளித்துள்ளார். கிரிக்கெட் உலகம் அதைப் பற்றிப் பேசி வருகிறது.ஐபிஎல் தொடரில் அபு தாபியில் நடந்த 21வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்தப் போட்டியில் சுனில் நரைன் நான்காவது பேட்ஸ்மேனாக இறங்கினார். அவருக்குப் பின்னர் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்தின் இயான் மோர்கன் விளையாடினார்.

வழக்கமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில்லுடன் சுனில் நரைன் இறங்கி வந்தார். நேற்றைய போட்டியில் ராகுல் திரிபாதி முதல் இணையில் இறங்கினார். சுனில் நரைன் நான்காவதாகவும், இயான் மோர்கன் ஐந்தாவதாகவும் இறங்கினர்.

அதைக் குறித்து பென் ஸ்டோக்ஸ் ட்விட்டரில், "மோர்கனுக்கு முன்னால் நரைன்?" என்று ஆச்சரியத்துடன் பதிவிட்டிருந்தார். அதற்கு யுவராஜ் சிங், "ஆமாம். ஸ்டோக்ஸுக்கு முன்னர் யுவராஜ் இறங்குவதுபோல. சில நேரங்களில் ஆல்ரவுண்டர்கள் முன்னே செல்வர். பேட் செய்யக்கூடிய பௌலர்கள் அடித்து ஆடுவதற்காக நல்ல பேட்ஸ்மேனுக்கு முன்னர் செல்வர்" என்று பதில் அளித்திருந்தார்.பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங் இருவருமே இடக்கை பேட்ஸ்மேன்கள். பந்தும் வீசக்சுடியவர்கள்.

ஆனால் யுவராஜ் தன்னை 'பேட் செய்யக்கூடிய பௌலர்' என்ற வகையில் சேர்த்துள்ளார். யுவராஜ் தன்னையே சற்று தாழ்த்தி வேடிக்கையாக அப்படிக் குறிப்பிட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நேற்று பேட்டிங் வரிசையில் செய்யப்பட்ட மாற்றம் சற்று ஆச்சரியத்தையே அளித்தது.வியாதிப்பட்டுள்ள தந்தையுடன் நியூஸிலாந்தில் இருந்துவந்த பென் ஸ்டோக்ஸ் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து, தனிமைப்படுத்தலில் இருக்கிறார். 2017ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வரும் ஸ்டோக்ஸ் 34 போட்டிகளில் 635 ரன்கள் எடுத்துள்ளதோடு 26 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பென் ஸ்டோக்ஸின் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இந்த ஐபிஎல் தொடரின் 22வது போட்டி இன்று நடைபெற உள்ளது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Ipl league News