ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (18-10-2020) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த போட்டியில், பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் நேற்றைய போட்டியில் அதிரடியாக பந்து வீசினர். பேட்டிங் பவர் பிளே முடிவதற்குள் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களை நிலை குலைய வைத்து, விக்கெட்டுகளை வீழ்த்தினர். மும்பை அணியின் கேப்டன் மற்றும் அதிரடி வீரரான ரோகித் சர்மா (9), இஷான் கிஷான் (7) இருவரையும் தனது வேகப்பந்து வீச்சில் வீழ்த்தி பெவிலியன் அனுப்பினார், பஞ்சாப் அணியின் இளம் பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்.
மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை, தனது ஸ்விங் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற்றினார் முகமது ஷமி. 6 வது ஓவர் முடிவில் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தனர் பஞ்சாப் பந்து வீச்சாளர்கள். இந்த பந்து வீச்சை இவர்கள் சீசனின் தொடக்கத்தில் இருந்தே வீசியிருக்கலாம். தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்க, டி காக் மட்டும் ஒருபுறம் நிலைத்து விளையாடி கொண்டிருந்தார், இவருடன் கைகோர்த்த குர்னால் பாண்டியா நிதானமாக விளையாடினர்.
டி காக் 43 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சர் என 53 ரன்களை விளாசி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ஆடிக்கொண்டிருந்த குர்னால் பாண்டியா 34 ரன்களில், ரவி பிஷ்னோய் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் (34), கோல்டர் நைல் (24) ரன்களை விளாசி, இருபது ஓவர் முடிவில் மும்பை அணி 176 ரன்களை சேர்த்தது. இருபது ஓவர் முடிவில் 177 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் அணி. தொடக்க வீரரான ராகுல் அதிரடியாக ஆடி 51 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சர் என 77 ரன்களை விளாசினார்.
சென்னை அணியின் கேதார் ஜாதவை போல, பஞ்சாப் அணியில் மேக்ஸ் வெல் இருவருமே அணியில் இருப்பதற்கான காரணம் அந்தந்த அணியின் நிர்வாகத்திற்கே தெரியாது போல ( சந்திரமுகி படத்தில் வரும் பாம்பை போல, இவர்கள் இருவரும்) கெய்ல் (24) , பூரான் (24) மற்றும் ஹுடா ( 23) ரன்களை விளாச பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில் 176 ரன்களை எடுத்து போட்டியை டிரா செய்தது. இந்த சீசனில் சூப்பர் ஓவர் விளையாடவே களமிறங்கியது பஞ்சாப் அணி தான் என்ற அளவுக்கு, அதிகமான சூப்பர் ஓவரை விளையாடியது பஞ்சாப் அணி தான்.
நேற்றைய போட்டியிலும் சூப்பர் ஓவரில் விளையாடிய பஞ்சாப் அணியை 5 ரன்களில் சுருட்டினார் மும்பை அணியின் வேக பந்து வீச்சாளர். பின்னர் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களை தனது யார்க்கர் பந்தின் மூலம் திணறவைத்து சூப்பர் ஓவரையும் டிராவாக மாற்றினர் பஞ்சாப் அணியினர்.
நேற்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் மீண்டும் அரங்கேறியது அடுத்த சூப்பர் ஓவர். இதில் 11 ரன்களை பஞ்சாப் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி. பஞ்சாப் அணியின் கெய்ல் மற்றும் அகர்வால் இருவரும் 4 பந்தில் இலக்கை எட்டி வெற்றியை சுவைத்தனர் பஞ்சாப் வீரர்கள். 77 ரன்களை விளாசிய ராகுல் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.