மும்பை வீரர் க்ருனால் பாண்ட்யா துபாயிலிருந்து கொண்டுவந்த நகையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

by Nishanth, Nov 13, 2020, 16:37 PM IST

ஐபிஎல் வெற்றிக் கோப்பையுடன் துபாயில் இருந்து மும்பை வந்த வீரர் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் ₹1 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நகை மற்றும் வாட்சுகள் இருந்தது தெரியவந்துள்ளது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லியை தோற்கடித்து கோப்பையை வென்ற மும்பை அணி வீரர்களுக்கு பரிசுகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்பான்சர்கள் வீரர்களுக்கு பரிசுகளை வாரி வாரிக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மும்பை வீரர்கள் துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் வீரர்களிடம் சுங்க இலாகா மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனையில் மும்பை வீரர் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் அளவுக்கதிகமான நகைகள் மற்றும் வாட்சுகள் மற்றும் பரிசுப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விமான நிலையத்திலேயே பிடித்து வைத்தனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இந்திய சட்டத்தின்படி குறிப்பிட்ட அளவு தங்கம் மற்றும் பொருட்களை மட்டுமே கொண்டுவர முடியும். ஆனால் க்ருனால் பாண்ட்யாவின் பேக்கில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக நகைகள் மற்றும் பொருட்கள் இருந்தன. அதை பரிசோதித்தபோது ₹ 1 கோடிக்கு மேல் நகைகளும், வாட்சுகள் மற்றும் பொருட்ளும் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தனக்கு எந்த அளவுக்கு பொருட்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து தெரியாது என்றும், முதல்முறை என்பதால் மன்னிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்குரிய அபராதத் தொகையைக் கட்டி விடுவதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து க்ருனால் பாண்ட்யாவிடமிருந்து அபராதத் தொகையை வசூலித்த பின்னர் அதிகாரிகள் அவரை விடுவித்தனர். இவர் ஏற்கனவே சமூக இணையதளங்களில் விலை உயர்ந்த வாட்சுகள் குறித்து பதிவிட்டு வந்துள்ளார். அன்று முதலே அவரை வருவாய் புலனாய்வுத் துறை தீவிரமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

More Cricket News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை