இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை மரணம்

by Nishanth, Nov 21, 2020, 12:17 PM IST

இந்திய டெஸ்ட் அணியில் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முஹம்மது கவுஸ் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் முகமது சிராஜ். ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல்ஸ் அணியில் தான் இவர் முதன்முதலாக விளையாடத் தொடங்கினார். அனைத்து போட்டிகளிலும் அவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிராஜின் சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே பெங்களூர் அணி அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. முகமது சிராஜின் குடும்பம் ஹைதராபாத்தில் உள்ளது. இவரது தந்தை முகமது கவுஸ் ஆட்டோ ஓட்டி வந்தார். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியது குறித்து அறிந்த அவர், தனது மகனை அழைத்துப் பாராட்டினார்.

அப்போது, ஹைதராபாத்தில் அன்று வெளியான அனைத்து பத்திரிகைகளும் உனது புகைப்படத்தைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று சிராஜிடம் அவர் கூறினார். அந்த சமயத்தில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் முகமது கவுஸ் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிராஜுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள சிராஜால் தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியது: நம்முடைய நாட்டின் புகழை உயர்த்த வேண்டும் என்று எனது தந்தை எப்போதும் என்னிடம் கூறி வருவார்.

அதை நான் உறுதியாகச் செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கிரிக்கெட் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை வளர்க்கவும், நான் சிறந்த கிரிக்கெட் வீரராக உயரவும் எனத் தந்தை மிகுந்த சிரமப்பட்டார். ஆட்டோ ஓட்டித் தான் எனது கனவை நனவாக்க அவர் முயற்சித்தார். அதற்காக அவர் பட்ட சிரமங்களை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். எனது தந்தையின் மரணம் என்னை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. என்னுடைய வாழ்க்கையில் அவர் பெரும் உறுதுணையாக இருந்தார். இந்த நஷ்டத்தை என்னால் ஈடுகட்ட முடியாது.

நான் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்ப்பதற்கு அவர் மிகுந்த ஆவலுடன் இருந்தார். அதை நான் நிறைவேற்றிக் கொடுத்துள்ளேன். எனது தந்தை இறந்த விவரத்தைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் விராட் கோஹ்லியும் தான் என்னிடம் கூறினர். தைரியமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.

More Sports News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>



அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை