இந்திய அணிக்காகத் தனது முதல் ஒரு நாள் போட்டியை இன்று விளையாடுகிறார். தமிழகத்தின் சின்னப்பம்பட்டி இளைஞர் நடராஜன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற நடராஜனின் கனவு இன்று நனவாகி உள்ளது. இது அவரின் கனவும் பயணத்தின் மிகப்பெரிய வெற்றி மைல்கல். தமிழகத்தில் இருந்து இந்திய அணிக்காக, தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது வேகப்பந்து வீச்சாளரும் இவர் தான்.
கனவுகளைச் சுமந்து ஓடும் பல இளைஞர்களின் அடையாளமாக மாறியுள்ள நடராஜனின் வாழ்க்கை பயணம் அவ்வளவு எளிதாக ஆரம்பிக்கவில்லை. 29 வயதாகும் நடராஜனின் தந்தை ஒரு ஜவுளி உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர். அவரின் தாயார் தினக்கூலியாக நொறுக்குத்தீனி விற்கும் பணியைச் செய்து வந்தார். மேலும் இவருக்கு ஐந்து சகோதரிகள் உள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கப் போட்டு புத்தகம் கூட வாங்க முடியாத சூழல், இரவு உணவுக்கே வழியில்லாத போதும், வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தாலும், கிரிக்கெட் எனும் தனது கனவை நோக்கி பயணத்தை இலக்காகக் கொண்டு வேகமெடுக்க ஆரம்பித்தார் நடராஜன்.
தனது 20 வயது வரை நடராஜன் டென்னிஸ் பந்தில் மட்டுமே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அனைவருக்குமான வாய்ப்பு யாரு ஒருவரின் மூலம் நம்மை வந்து சேரும், ஆனால் அதற்கு நாம் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்க வேண்டும். நடராஜனின் கடுமையான உழைப்பிற்கு ஜெயப்பிரகாஷ் என்பவரின் மூலம் TNCA வின் 4 வது சீசனில் 2011 ல் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நடராஜனின் இந்த பயணத்தின் தொடக்கத்திற்கு வித்திட்டவர் மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ். இந்த நன்றியை மறக்காத நடராஜன் 2020 ஐபிஎல் சீசனில் தனது ஜெர்சியில் "JP NATTU" என்று பெயருடன் தொடரில் ஆடினார்.
நடராஜனின் தனது முதல் தர போட்டியை 2015 ல் தொடங்கினார். ஆனால் அவரின் பந்து வீச்சு முறையாக இல்லை எனத் தமிழ்நாடு வேகப்பந்து குழுமம் முறையிட்டது. இதனால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் தனது பந்து வீச்சு முறையை மாற்றி மீண்டும் கடுமையாக உழைத்து தனது பயணத்தைத் தொடங்கினார். அடுத்த வாய்ப்பாக அமைந்தது 2016 ல் தொடங்கப்பட்ட TNPL தொடர். பின்னர் இந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட நடராஜன் 2017 ல் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காகத் தேர்வானார். ஆனால் 2017 ஐபிஎல் சீசனில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் விளைவு பஞ்சாப் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். பின்னர் ஹைதராபாத் அணியில் தேர்வு செய்யப்பட்டு நெட் பவுலராகவே இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தார். ஒருவழியாக 2020 ல் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட "நட்டு" தனது யார்க்கர் பந்து வீச்சின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஐபிஎல் 2020 சீசனில் ஹைதராபாத் அணிக்காக இக்கட்டான சூழ்நிலையில் பந்து வீசி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக வீராத் கோலி, டிவில்லியர்ஸ் போன்றோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் கூறுகையில், இத்தனை ஆண்டுகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தான் எனவும், மேலும் இந்த 2020 ஐபிஎல் சீசனில் எனது "கதாநாயகன்" நடராஜன் தான் என்று கூறியிருந்தார்.
ஐபிஎல் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட நடராஜனுக்கு, அவரின் கனவான இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்திய - ஆஸ்திரேலியா தொடரில் முதலில் அவர் 20 பேர் கொண்ட அணியில் மட்டுமே இடம் பெற்றிருந்தார். இந்த தொடரானது 3 ஒருநாள் போட்டி, 2 இருபது ஓவர் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்டது. இதில் இருபது ஓவர் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் வருணுக்கு ஏற்பட்ட காயத்தால் அவர் தொடரில் இருந்து விலகினார். இதனால் நடராஜன் அவருக்குப் பதில் சேர்க்கப்பட்டார்.
இந்திய- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய மூன்று ஒருநாள் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் மூத்த வீரரான ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், அவருக்குப் பதில் நடராஜன் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலியின் முன்னிலையில் 232வது வீரராகச் சேர்க்கப்பட்டார்.
தமிழகத்திலிருந்து இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்தாவது வீரர் நடராஜன். 2002 ல் தமிழகத்தில் இருந்து முதன் முதலில் பந்து வீச்சாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் லட்சுமிபதி பாலாஜி.
வாழ்த்துக்கள் நட்டு...