சுய நினைவை இழந்திருக்கிறேன் வலியால் துடித்திருக்கிறேன் – சாதனை நாயகி அஞ்சு பாபி ஜார்ஜ்!

by Sasitharan, Dec 9, 2020, 21:04 PM IST

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அஞ்சு பாபி ஜார்ஜ். கடந்த 2003 ம் ஆண்டு பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித் தந்தார். கேரளாவில் வசித்து வரும் அஞ்சு, ஆசிய விளையாட்டி போட்டிகளில் கலந்துகொண்டு இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றவர். அதுமட்டுமின்றி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதங்களை வாங்கி குவித்துள்ளார்.
நாட்டுக்கே பெருமை சேர்ந்த அவரது உழைப்பும், பயிற்சியுடன், அவரது மன உறுதியை பாராட்ட வேண்டியுள்ளது. ஆம்! ஏன் அஞ்சுவின் மன உறுதி பாராட்டத்தக்கது என்ற கேள்வி எழலாம். இதற்கு பதில் சொல்ல அவருடைய டிவிட்டர் பதிவே போதுமானது. இத்தனை நாட்கள் சொல்லாம் தனது மனதோடு வைத்திருந்த ரகசியத்தை முதல்முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.


``நம்பினால் நம்புங்கள். நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. ஒரே ஒரு கிட்னி வலிநிவாரணிக்கு கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. மந்தமான கால்கள். இப்படி பல தடைகள் என்முன்னே இருந்தன. ஆனாலும், என்னால் உலக தர வரிசையில் உச்சியை தொட முடிந்தது. இதை என் பயிற்சியாளரின் மாயமென்று சொல்வதா அல்லது திறமை என்று சொல்வதா” என்று அஞ்சு டிவீட் செய்துள்ளார். அவரது பயிற்சியாளர் வேறு யாருமில்லை அவருடைய கணவன் ராபர்ட் பாபி ஜார்ஜ் தான்.

அவரது டிவீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு அமைச்சர் கிரன் ரிஜிஜு (Kiren Rijiju), ``அஞ்சு தனது கடின உழைப்பு, திடம் மற்றும் உறுதியானால் இந்தியாவுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார்” என வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் ஆங்கி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அஞ்சு அளித்த பேட்டியில், ``நான் பிறந்ததிலிருந்தே எனக்கு இந்த பிரச்னை இருக்கிறது. இதனால்தான் காயங்களிலிருந்து மீண்டு வர எனக்கு எப்போதும் அதிக நேரம் தேவைப்பட்டது. எப்போதும் ரத்ததில் யூரியா அளவு அதிகமாக இருக்கும். தசைப்பிடிப்புகளில் அடிக்கடி வலி ஏற்படும். வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ள முயற்சித்த சமயங்களில் சுய நினைவை இழந்து தவித்திருக்கிறேன். இதன்காரணமாக என்னை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

2001-ல் தான் ஒரு பரிசோதனையின்போது, நான் ஒற்றை கிட்னியுடன் பிறந்திருப்பது தெரியவந்தது. அப்போது, தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்தேன். பெரிய பிரச்னையில்லை, தொடர்ந்து விளையாடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கையளித்த பின்னர் தான் பயிற்சிகளை தொடர ஆரம்பித்தேன். பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு ஒருவாரம் இருக்கும். அப்போது, ஒற்றை கிட்னி காரணமாக எனது உடல்நிலையில் ஒரு பிரச்சனை வந்தது. தொடர்ந்து பயிற்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்றதால், எனது உடல் சோர்வடைந்தது. என்னை பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமாதம் ஓய்வெடுக்கும்படி கூறினார்கள். ஆனால் நான் தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தேன். அப்போது, இந்த பிரச்னையை வெளியில் சொல்ல தயங்கினேன். இதில் ஒன்றுமில்லை என்று வெளியில் சொல்லும் அளவுக்கான பக்குவத்தை இப்போதுதான் அடைந்திருக்கிறேன். இதை வெளியில் சொல்லுவதன் மூலம் பலரையும் ஊக்கப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading சுய நினைவை இழந்திருக்கிறேன் வலியால் துடித்திருக்கிறேன் – சாதனை நாயகி அஞ்சு பாபி ஜார்ஜ்! Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை