என்னுடைய மகளின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவது வேதனை அளிக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கூறியுள்ளார்.பாகிஸ்தான் அணியில் ஒரு காலத்தில் அதிரடி ஆட்டக்காரராக இருந்தவர் அப்ரிடி. பேட்டிங்கில் மட்டுமில்லாமல் பந்து வீச்சிலும் இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். ஒரு நாள் போட்டியில் மிக குறைந்த ரன்களில் அரைசதம் அடித்து இவர் சாதனை படைத்துள்ளார். 40 வயது ஆன போதிலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார்.
தற்போது இவர் இலங்கை பிரீமியர் லீக்கில் காலே கிளாடியேட்டர்ஸ் அணி கேப்டனாக உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் திடீரென இவர் போட்டியிலிருந்து விலகி பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்றார். இதையடுத்து அப்ரிடியின் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. சில சமூக ஊடகங்களில் அப்ரிடியின் மகள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தான் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இதை தற்போது அப்ரிடி மறுத்துள்ளார். என்னுடைய மகள் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. என்னுடைய சில தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான் நான் இலங்கை லீக் கிரிக்கெட்டில் இருந்து விலகி ஊருக்குச் சென்றேன். என்னுடைய பணி முடிந்தவுடன் மீண்டும் அணியுடன் இணைவேன். இவ்வாறு அவர் கூறினார். அப்ரிடியின் மகளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தான் அவர் திரும்பிச் சென்றார் என்று இலங்கை பிரீமியர் லீக் போட்டி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகளுடன் அப்ரிடி இருக்கும் போட்டோவையும் இலங்கை பிரீமியர் லீக் போட்டியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.