தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் என்ற பெருமைக்குரியவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த அப்துல் ஜப்பார்.இவர் 1980-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளின் தமிழ் வர்ணனையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அப்போது தமிழ்நாடு கேரள அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இவர் தமிழில் வர்ணனையைச் செய்து பலரது பாராட்டையும் பெற்றார்.1982-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய இங்கிலாந்து போட்டியில் இவரது தமிழ் வர்ணனையைச் கேட்ட அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர், இவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக பணியாற்றும்படி படி ஐ.பி.சி தமிழ் வானொலி விடுத்த அழைப்பை ஏற்று, லண்டனுக்குச் சென்று 45 நாட்கள் வர்ணனை செய்தார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு லண்டன் சென்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தமிழில் வர்ணனை செய்தார்.
2007-ஆம் ஆண்டு இ.எஸ்.பி என். ஸ்டார் கிரிக்கெட் டிவிக்காக, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 20:20 உலகக்கோப்பை கிரிக்கெட்டைத் தமிழில் வர்ணனை செய்தார். இதுவரை 35 கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளின் வர்ணனையாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.இலக்கிய நயம் மிக்க இவரது தமிழ் வர்ணனையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன். 2002 ஆம் ஆண்டு இவரை ஈழத்திற்கு நேரில் அழைத்து விருந்தளித்துப் பாராட்டினார். அந்த சந்திப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை “அழைத்தார் பிரபாகரன்” எனும் நூலாகப் பதிவு செய்துள்ளார் அப்துல் ஜப்பார்.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர், , வர்ணனையாளர் எனப் பன்முகம் கொண்ட அப்துல் ஜப்பார் இன்று காலமானார். அவருக்கு வயது 81.