ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் இந்திய வீரர்கள் அறிவிப்பு சிராஜ், சுப்மான் கில்லுக்கு அரங்கேற்றம்

by Nishanth, Dec 25, 2020, 16:26 PM IST

நாளை மெல்பர்னில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நாளைய போட்டியில் அரங்கேறுகின்றனர்.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் இந்தப் போட்டியில் பல வீரர்கள் மாற்றப்படுவார்கள் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது.

மனைவியின் பிரசவத்திற்காக விராட் கோஹ்லி ஊருக்குத் திரும்பி விட்டதால் அவருக்குப் பதிலாக ரஹானே கேப்டனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நாளை தொடங்க உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இரண்டு பேருக்குமே இது அரங்கேற்றப் போட்டியாகும்.

இதுதவிர ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜாவும் அணிக்கு வந்துள்ளனர். முதல் போட்டியில் மோசமாக ஆடிய ஓப்பனர் பிரித்வி ஷாவுக்குப் பதிலாக சுப்மான் கில் அணியில் இடம் பிடித்துள்ளார். காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமிக்கு பதிலாக முகம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவுக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மாயங்க் அகர்வால் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்குவார்கள். விராட் கோஹ்லி ஊர் திரும்பி விட்டதால் அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஹனுமா விஹாரிக்கு இந்த போட்டியிலும் இடம் கிடைத்துள்ளது.

அணி வீரர்கள் விவரம்:அஜிங்கியா ரஹானே, மாயங்க் அகர்வால் சுப்மான் கில், சேதேஷ்வர் பூஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஆர். அஷ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ். சமீப நாட்களாக ரவீந்திர ஜடேஜா டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். பந்து வீச்சு, பேட்டிங் என ஆல்-ரவுண்டராக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். முதல் டி20 போட்டியில் காயம் அடைந்ததால் முதல் டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இவர் மீண்டும் அணிக்கு வந்திருப்பதன் மூலம் பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு பலம் கிடைக்கும். இதையடுத்து இந்திய அணிக்கு 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட மொத்தம் 5 பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்திய நேரப்படி காலை 5 மணிக்குப் போட்டி தொடங்கும். மெல்பர்ன் ஸ்டேடியத்தில் 30 ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்ததால் இந்த டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய வீரர்கள் உள்ளனர்.

You'r reading ஆஸ்திரேலியாவுடன் 2வது டெஸ்ட் இந்திய வீரர்கள் அறிவிப்பு சிராஜ், சுப்மான் கில்லுக்கு அரங்கேற்றம் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை