செவ்வாய் கிழமை சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, புரட்சியின் முதல் தீப்பொறியை ஒரு வாரத்திற்கு முன்னே கொளுத்திப் போட்டிருந்தார் ஜேம்ஸ் வசந்தன். பல ஊடகங்கள் அவரது கருத்தை தமிழகம் முழுக்க கொண்டு சேர்த்தது. அது தொடர்பான செய்தியை நாமும் வெளியிட்டிருந்தோம்.
ஐபிஎல் புறக்கணிப்பு என்ற போராட்டம், படிப்படியாக சமூக வலைதளங்கள், ஊடகங்கள் என பரவி, அரசியல் கட்சிகள் முன்னெடுத்து செல்லும் அளவிற்கு தீவிரமடைந்தது. இந்த போராட்டம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, பல எதிர்மறை கருத்துக்களும் அதை தடுக்கும் நோக்கில் திட்டமிட்டு பரப்பப்பட்டன. எல்லா கருத்துக்கும் ஒரு எதிர் கருத்து பிறப்பது இயற்கை தானே.
சில அரசியல் கட்சிகள் நடத்திய ஐபிஎல் புறக்கணிப்பு பிரச்சாரத்தின் போது, ஜனநாயக விரோத போக்கை கடைபிடிக்கும் வகையில், சென்னை அணி ரசிகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின. அவைகள் அதன் தலைமைகளால் அனுமதிக்கப் பட்டிருக்க கூடாது. “போராட்டத்தில் உருவாகும் வன்முறை அதன் வெற்றியை பாதிக்குமே”. போட்டியின்போது மைதானத்திற்குள் காலணிகள் வீசப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர். அதுவும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். “கிரிக்கெட்டை அல்ல, அதன் மூலமே வாய்ப்பை உருவாக்கி, ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பை பதிவு செய்கிறோம்” என்கிற புரிதல் சிலருக்கு இல்லாமல் போனது, பலருக்கும் வருத்தமளிப்பதாகவே இருந்தது.
பல அரசியல் தலைவர்கள் போட்டியை புறக்கணிக்க ஆதரவு அளித்து, தினமும் அது சம்பந்தப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர், பல தலைவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற லெவலில் விடுத்த அறிக்கைகளால் அரசாங்கமும் கிரிக்கெட் வாரியமும் சற்று ஆடிப்போனது. வேல் முருகன் கட்சியினர் போட்டி நடக்கும் நாளில் மைதானத்தை பூட்டு போட்டு கைதாகினர்.
ஒருநாளைக்கு முன்னதாக, போட்டியை கேரளாவிற்கு மாற்றும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. போட்டி மாற்றப்பட்டால் அது அரசாங்கத்திற்கும், சட்டம்-ஒழுங்கிற்கும் தலைகுணிவு என்பதால், போட்டியை நடத்தியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டது. 7,000 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மைதானத்தில் கொடி, பேனர், லைட், கண்ணாடி, கார் சாவி, என இருபது வகையான பொருட்கள் கொண்டு வர தடை போட்டு, போட்டியை நடத்தி முடித்தனர். இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் சம்பந்தமான செய்திகள் அரசாங்கத்தின் மீது ரசிகர்களுக்கு பலத்த கோபத்தையே ஏற்படுத்தியது. மேலும் இது தமிழனின் தன்மானத்திற்கு ஏற்பட்ட இழுக்காக பார்க்கப்பட்டது.
ஒரு வழியாக டிக்கெட் எடுத்தவர்கள் அனைவரும் போட்டியை நேரில் கண்டு ரசித்திருந்தாலும், இந்த புறக்கணிப்பு போராட்டம் வெற்றியடைந்து அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், சென்னையில் நடக்கவிருக்கும் அடுத்த ஆறு போட்டிகள் தமிழகம் தவிர்த்து வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது, இந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியல்லவா. இந்த ஒரு போட்டிக்காக தமிழகம் பட்ட பாட்டை மொத்த இந்தியாவும் உற்று நோக்கியது, இந்திய ஊடகங்கள் பலவற்றிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு விவாதப்பொருளே இந்த ஐபிஎல் புறக்கணிப்பு போராட்டம் தான்.
விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைய, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட, இந்த ஐபிஎல் போராட்டம் ஒரு தீப்பொறியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இந்த போராட்டத்தின் முதல் பந்தை வீசிய ஜேம்ஸ் வசந்தன், இந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி குறித்த அவரது கருத்தை, தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார், அவற்றை கீழே காண்போம்.
“சுப்ரீம் கோர்ட்டு கொடுத்த 6-வார கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்காமல், கர்நாடக மாநிலத் தேர்தலில் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழகத்துக்குத் துரோகம் இழைத்த மத்திய அரசுக்கு நமது கண்டனத்தையும், எதிர்ப்பையும் நாம் பல போராட்டங்களை நடத்தி, கூக்குரலிட்டு தெரிவித்து வந்த வேளையில், IPL மூலமாக இந்த தேசத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்று ஒரு சின்ன எண்ணம் உதித்தது.
அதை நான் சொன்ன உடன் அது தமிழகம் முழுவதும் பரவியது. அது எதைக் காட்டியது? இது உகந்தது என்று பெரும்பாலோர் ஏற்றுக் கொண்டதைத்தானே? அதில் Boycott, Ban என்று எந்த ஒரு சொல்லையும் நான் பயன்படுத்தவில்லை. காரணம், நம் நோக்கம் கிரிக்கெட்டையோ, IPL-ஐயோ எதிர்ப்பது அல்ல. அந்தப் பெரிய அரங்கத்தைப் பயன்படுத்தி தேசத்தின் (National Media) கவனத்தை ஈர்ப்பதுதான்.
அது 100% சதவிகிதம் நிறைவேறியது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையில் மட்டுமே இருக்கிற ஒரு நதிப்பிரச்சனையை 5 நாட்களாக, இந்திய ஊடகமே விவாதித்தது. பல தலைவர்களும், பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும், வல்லுனர்களும், வழக்கறிஞர்களும் விவாத்தித்தனர். தமிழ்நாட்டுக்கு அரசியல் காரணங்களால் ஒரு நீதி மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக, தெள்ளத் தெளிவாக எல்லாரும் அவரவர்கள் பார்வையில் விளக்கிச் சொன்னார்கள்.
இவை மத்திய அரசுக்கு நிச்சயம் அழுத்தத்தைத் தந்திருக்கும். தந்திருக்கிறது. ஏற்கனவே 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு அவர்களைக் கொஞ்சம் கோபமாகவே, ‘அவர்கள் செய்தது எற்றுக்கொள்ள முடியாதது’ என்கிற தொனியில் கண்டித்தது. இந்த அழுத்தத்தை எதிர்நோக்கித்தான் நாம் பல வழிகளை முயற்சிக்கிறோம்.
அதனால், ‘நான் ஒரு நாள் கிரிக்கெட்டைப் பாக்கலன்னா அடுத்த நாள் காவிரியில் தண்ணீர் வந்துடுமா?’ போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளைக் கேட்காமல், நானும் இந்த மாநிலத்தின் பொதுப் பிரச்சனைக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று கொஞ்சம் சிந்தித்தால் நாம் எல்லோருமே பயனடைவோம்! அந்த விவசாயியைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்!” இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.