மாரடைப்பு காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி அதானி நிறுவனம் தயாரிக்கும் ஒரு சமையல் எண்ணெய் எண்ணெயின் விளம்பர தூதராக இருந்து வருகிறார். அந்த எண்ணெய் தொடர்பாக அவர் நடித்த விளம்பர படங்கள் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கங்குலி நடித்த அந்த விளம்பரங்களை அதானி நிறுவனம் நிறுத்தி விட்டது.
எங்களது இந்த எண்ணையை உபயோகித்தால் மாரடைப்பு வராது என்ற ரீதியிலான அந்த விளம்பரங்களில் நடித்த கங்குலிக்கு தற்போது மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. இது எதிர்மறை விளைவுகளை தோற்றுவிக்கும் என்பதால் அந்த விளம்பரங்களை அவசரஅவசரமாக அதானி நிறுவனம் நிறுத்தி விட்டது என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் அதானி நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இது குறித்து சமையல் எண்ணெயைத் தயாரிக்கும் அதானி வில்மர் நிறுவனம் சார்பில் அதன் தலைமை அதிகாரி அங்ஷு மாலிக் அழித்ததுள்ள விளக்கம்: எங்களுடைய அந்த பொருள் மருந்து அல்ல, சமையல் எண்ணெய் மட்டுமே.
ஒருவருக்கு இதய நோய் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. கங்குலி எங்களுடைய விளம்பரத் தூதராகத் தொடர்ந்து செயல்படுவார். அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய தொலைக்காட்சி விளம்பரம் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. கங்குலி குணமடைந்து வீடு திரும்பியதும் அவருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கையை செயல்படுத்துவோம். கங்குலிக்கு நடந்த இந்த உடல் நல குறைவு எதிர்பாராமல் நடந்த ஒன்று. இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.