தேசிய கீதம் இசைக்கும் போது கண்ணீர் விட்ட சிராஜ்

by Nishanth, Jan 7, 2021, 14:48 PM IST

சிட்னியில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் தேசிய கீதம் இசைத்த போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. மழை காரணமாக இன்றைய போட்டி சற்று தாமதமாகவே தொடங்கியது.

இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இரு நாட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய கீதம் இசைத்த போது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கண்ணீர் விட்டார். அவர் கண்ணீரை துடைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் தான் முதன் முதலாக சிராஜ் அரங்கேறினார். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிராஜ் சாதனை படைத்தார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை இவர் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தான் இவரது தந்தை ஹைதராபாத்தில் மரணமடைந்தார்.

ஆனால் தந்தையின் இறுதிச் சடங்கில் கூட கலந்துகொள்ள செல்லாமல் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தங்கினார். சிராஜின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று தேசிய கீதம் இசைத்த போது சிராஜ் கண்ணீர் விட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தன்னுடைய டுவிட்டரில் கூறுகையில், உங்களது நாட்டுப்பற்றை நான் மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு ஊக்கம் தர மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும், இந்தியாவுக்காக விளையாடுவது என்பதை தவிர வேறு எந்த ஊக்கமும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இன்றைய போட்டியிலும் சிராஜ் மிகவும் அற்புதமாக பந்துவீசினார்.

இன்றைய போட்டியில் முதல் விக்கெட் இவருக்குத் தான் கிடைத்தது. காயத்திலிருந்து குணமாகி இன்று மீண்டும் அணிக்கு திரும்பிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை சிராஜ் தான் ஆட்டமிழக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. லபூஷேன் 67 ரன்களுடனும், ஸ்மித் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். புக்கோவ்ஸ்கி 62 ரன்களிலும், வார்னர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். புக்கோவ்ஸ்கியின் விக்கெட்டை நவ்தீப் செய்னி கைப்பற்றினார்.

More Cricket News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை