சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு 407 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 338 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து இந்தியா 244 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 94 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னரும், புக்கோவ்ஸ்கியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போதிலும், பின்னர் களமிறங்கிய லபுஷேனும், ஸ்மித்தும் மிகச் சிறப்பாக ஆடினர். லபுஷேன் 73 ரன்களும், ஸ்மித் 81 ரன்களும் எடுத்தனர். மேத்யூ வேட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் கேமரான் கிரீன் மற்றும் கேப்டன் டிம் பெய்ன் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். கிரீன் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இன்று தேநீர் இடைவேளைக்கு முன் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. கேப்டன் டிம் பெய்ன் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா இந்தியாவை விட 403 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து இந்தியாவுக்கு 407 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய தரப்பில் அஷ்வின் மற்றும் நவ்தீப் செய்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்பின்னர் இந்தியா 407 என்ற கடினமான வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ளது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் விளையாடி வருகின்றனர். இதற்கிடையே காயம் காரணமாக இந்திய அணியின் முக்கிய வீரர்களான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெளியேறி இருப்பதால் இந்திய அணிக்கு இது பெரும் இக்கட்டை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் காயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.