எந்த மைனஸ் பாயிண்டும் இல்லை. இந்திய கேப்டன் கோஹ்லியை அவுட் ஆக்குவது மிகவும் சிரமமாக இருக்கும் என்று இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலி கூறுகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்த அணி இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டி 5 டி 20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 5ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் சென்னையில் தான் நடைபெறுகிறது. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. டி 20 போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்திலும், 3 ஒருநாள் போட்டிகளும் பூனாவிலும் நடைபெறுகிறது.
இந்திய மண்ணில் இந்திய அணியை சமாளிப்பது மிகவும் கடினம் என்று இங்கிலாந்து வீரர்களுக்கு தெரியும். அதுமட்டுமில்லாமல் தற்போது ஆஸ்திரேலியாவில் அபாரமாக ஆடி இந்திய அணி சரித்திர வெற்றி பெற்றுள்ளதும் இங்கிலாந்து அணிக்கு வீரர்களுக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியை சமாளிக்க இங்கிலாந்து வீரர்கள் பல அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை எப்படி அவுட் ஆக்குவது எனத் தெரியவில்லை என்று இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி கூறுகிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: கோஹ்லிக்கு எந்த மைனஸ் பாயிண்டும் கிடையாது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே அவர் விளையாடினார். எனவே எங்களுக்கு எதிரான போட்டியில் மிக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் தான் அவர் களத்தில் இறங்குவார். அவர் உலகத்தரம் வாய்ந்த ஒரு பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எந்த மைனஸ் பாயிண்டும் அவருக்கு இல்லாததால் அவரை எப்படி அவுட் ஆக்குவது என தெரியவில்லை. ஆஸ்திரேலியாவில் இந்தியா மிக அபாரமாக விளையாடியது. இங்கிலாந்து அணிக்கு மிகச் சிறப்பான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.