டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய வழக்கமான பேட்டிங் முறையை ரோகித் சர்மா மாற்ற வேண்டாம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து, 2வது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. 2-வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இதற்கிடையே, இந்த தோல்விக்குப்பின் பேட்டியளித்த கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார். இருப்பினும், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் ரோகித் சர்மா சரியாக விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரோகித் சர்மா குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமச்சாரி ஸ்ரீகாந்த், ரோகித் சர்மா அனுபவமிக்க வீரர் என்றும் அவருக்கு எப்படி விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும். இருப்பினும், டெஸ்ட் போட்டிக்காக தன்னுடைய வழக்கமான பேட்டிங் முறையை ரோகித் சர்மா மாற்றக்கூடாது என்றார். ரோகித் சர்மா ஒரு முறை ஆடுகளத்தில் நின்றுவிட்டால்போதும், பின்னர் ரன்கள் சொல்லாமலே வந்து கொண்டிருக்கும். எதிரணியின் கேப்டனால் கூட அவருக்கு பீல்டிங் அமைப்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது.
அதன் பின்பு எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார். ரோகித் விளையாடுவதை பார்ப்பதற்கே அற்புதமாக இருக்கும் என்றார். இருப்பினும், 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.