இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த படுதோல்வியை தொடர்ந்து சென்னையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. முந்தைய போட்டியில் கிடைத்த படுதோல்விக்கு இந்தியா பழி தீர்க்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்த மகிழ்ச்சியின் ஆரவாரம் அடங்குவதற்குள் சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்த படுதோல்வி இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுவும் 227 ரன்கள் என்ற மாபெரும் தோல்வியை இந்திய ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்பட முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, ரகானே, புஜாரா உட்பட யாருமே சிறப்பாக விளையாடவில்லை. பந்துவீச்சாளர்களில் அஷ்வினால் மட்டுமே சிறப்பாக செயல்பட முடிந்தது. இஷாந்த் சர்மா, பும்ரா உள்பட முன்னணி பந்துவீச்சாளர்கள் ஒருவராலும் அதிகமாக சாதிக்க முடியவில்லை. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நாளை மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்கு இந்தியா பழிவாங்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று நாளை காலையில் மட்டுமே தெரியும். ஆனால் இங்கிலாந்து அணியில் 12 வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் பெஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மோயின் அலி ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. இந்திய அணியில் ஷஹ்பாஸ் நதீம் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாளை தொடங்க உள்ள போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.