இந்தியா முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் ரோகித் சர்மா 166 ரன்களில் அவுட்

by Nishanth, Feb 13, 2021, 17:36 PM IST

சென்னை டெஸ்டில் முதல் நாளில் உணவு இடைவேளைக்கு முன்பு மூன்று முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா இன்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 33 ரன்களிலும், அக்சர் படேல் 5 ரன்களிலும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.சென்னையில் கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்களில் படுதோல்வி அடைந்த நிலையில் இன்று 2வது டெஸ்ட் போட்டி மீண்டும் சென்னையில் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் டாசை இழந்ததும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டாசில் வெற்றி பெற்றதை அறிந்ததும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். இன்று இந்திய வீரர்களின் பேட்டிங் விருந்தை ரசிக்கலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு பின்னர் தற்போது தான் முதன் முதலாக ஒரு விளையாட்டுப் போட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய போட்டியில் தொடக்கத்திலேயே இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி ரன் எதுவும் சேர்க்காமலேயே முதல் விக்கெட்டை இழந்தது. ஸ்டோனின் பந்தில் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரோகித் சர்மாவுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தனர். புஜாரா ஒருபுறம் வழக்கம் போல மெதுவாக ஆட, மறுமுனையில் ரோகித் சர்மா அதிரடியாக பேட்டிங் செய்தார். ஆனால் புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து இந்தியா 85 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

இதன்பிறகு ரோகித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோஹ்லி இணைந்தார். ஆனால் அவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். கோஹ்லி ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்பே மோயின் அலியின் பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார்.இதனால் இந்தியா 86 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. பின்னர் 4வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ரகானே இறங்கினார். இவர் ரோகித் சர்மாவுடன் இணைந்து சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்தார்.

இதன் பின்னர் ரகானே அரை சதத்தை தாண்டினார். இருவரும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தபோது 161 ரன்களில் ரோகித் சர்மா ஜேக் லீச்சின் பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். இதன் பிறகு ரகானேவுடன் ரிஷப் பந்த் இணைந்தார். ஆனால் 67 ரன்களில் ரகானே மோயின் அலியின் பந்தில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பந்துடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைத்து நிற்கவில்லை. அஷ்வின் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 7வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகள் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பந்த் 33 ரன்களுடனும், அக்சர் படேல் 5 ரன்களுடன் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

You'r reading இந்தியா முதல் நாளில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் ரோகித் சர்மா 166 ரன்களில் அவுட் Originally posted on The Subeditor Tamil

More Sports News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை