சென்னை டெஸ்ட் போட்டியில் பரபரப்பு தொடங்கி விட்டது. இன்று 2வது நாளில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கும் அடிமேல் அடி கிடைத்து வருகிறது. 39 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது. முதல் டெஸ்ட் நாயகன் ஜோ ரூட் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 29 ரன்கள் எடுப்பதற்குள் மீதமுள்ள 4 விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இன்று அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும், முகம்மது சிராஜ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து தரப்பில் மோயின் அலி 4 விக்கெட்டுகளையும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், ஜேக் லீச் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் ஜோ ரூட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன் பின்னர் இங்கிலாந்து தங்களுடைய முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்சும், சிப்லியும் களமிறங்கினர். இந்தியாவைப் போலவே இங்கிலாந்துக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இஷாந்த் ஷர்மா வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் கணக்கிலும் ரன் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதன் பிறகு சிப்லியுடன் லாரன்ஸ் களமிறங்கினார். ஆனால் சிப்லி 16 ரன்கள் எடுத்திருந்த போது அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் லாரன்சுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் எடுத்து அசத்திய ஜோ ரூட்டால் இம்முறை சிறப்பாக ஆட முடியவில்லை. அவரும் விரைவில் ஆட்டமிழந்தார். அவர் அக்சர் படேல் பந்தில் 6 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து 23 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதன்பிறகு லாரன்சுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் லாரன்ஸ் 9 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்கு முன்னதாக அஷ்வின் வீசிய கடைசி பந்தில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 39 ரன்களுடனும் தவித்துக் கொண்டிருக்கிறது. உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. அஷ்வின் 2 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஷர்மா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.