இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டைம்ஸ் இதழின் உலகின் 100 செல்வாக்குள்ள மனிதர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோலி… இந்திய கிரிக்கெட்டின் நிகழ்கால ரத்தினம்… வரலாற்றுப் பொக்கிஷம்… சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் ரசிகன் ஒவ்வொருவனின் மனதிலும் மகுடம் சூடி அமர்ந்துள்ள சாம்பியன்.
கிரிக்கெட்டில் இருக்கும் பெரும்பான்மையான சாதனைகளை முறியடித்து வரும் கோலிக்கு, உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் இதழ் ஒரு சிறப்பான அந்தஸ்த்தைக் கொடுத்துள்ளது. உலகின் செல்வாக்குள்ள 100 நபர்கள் பட்டியலில் கோலியை தேர்வு செய்ததே அந்த அந்தஸ்து.
அந்த இதழில் சச்சின், கோலி பற்றி எழுதியுள்ளார். லிட்டில் மாஸ்டர், `ரன்களை எப்போதும் வேட்டையாடும் மனோபாவம் கோலிக்கு உண்டு. அதைத் தொடர்ந்து செய்வது கோலியின் ஸ்டைல். இந்தியர்கள் அனைவரின் வீட்டிலும் கோலியின் பெயர் இன்று உச்சரிக்கப்படுகிறது.
அவர் ஒரு சாம்பியன்’ என்று புகழாரம் சூட்டியுள்ளார். இந்த சிறப்பு அந்தஸ்து குறித்து கோலி, `இப்படிப்பட்ட கனிவான வார்த்தைகளுக்கு சச்சினுக்கு நன்றிகள். செல்வாக்குள்ள 100 மனிதர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது பெருமை அளிக்கிறது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.