3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி

by Nishanth, Feb 22, 2021, 09:54 AM IST

ஐபிஎல்லில் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ள உத்தப்பா, ஜெகதீஷ் மற்றும் கெய்க்வாட் ஆகிய மூன்று ஓப்பனர்களும் விஜய் ஹசாரே போட்டியில் அதிரடி சதமடித்தது ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் 14வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் தான் உள்ளன. கடந்த வாரம் சென்னையில் ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாகத் தென் ஆப்பிரிக்க வீரரான கிறிஸ் மோரிசை ராஜஸ்தான் அணி ₹ 16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இது மிக அதிக தொகையாகும். முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தான் இதுவரை மிக அதிக தொகையான ₹ 16 கோடிக்கு ஏலம் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை அணி முன்னாள் இந்திய வீரர் உத்தப்பா மற்றும் இளம் வீரர்களான ஜெகதீஷ் மற்றும் கெய்க்வாட் ஆகியோரை ஏலத்தில் எடுத்திருந்தது. இவர்கள் மூன்று பேருமே தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர். இந்நிலையில் இந்த மூன்று வீரர்களும் விஜய் ஹசாரே போட்டியில் அற்புதமாக ஆடி வருவது சென்னை அணிக்கு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தப்பா கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடினார். இந்த முறை டிரேடிங் மூலம் அவரை சென்னை அணி சொந்தமாக்கி உள்ளது.

உத்தப்பா, ஜெகதீஷ் மற்றும் கெய்க்வாட் ஆகியோர் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடி வருகின்றனர். உத்தப்பா கேரள அணிக்காகவும், ஜெகதீஷ் தமிழ்நாடு அணிக்காகவும், கெய்க்வாட் மகாராஷ்டிரா அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். கெய்க்வாட் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக உள்ளார். ஒடிஷாவுக்கு எதிராக நடந்த போட்டியில் உத்தப்பா அதிரடியாக விளையாடிச் சதமடித்தார். இவரது சிறப்பான ஆட்டம் காரணமாகக் கேரளா 34 ரன்களில் வெற்றி பெற்றது. இவர் 85 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 107 ரன்கள் குவித்தார். இதேபோல பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ஜெகதீஷ் அதிரடியாக விளையாடிச் சதமடித்தார். இவர் 103 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்தார். இவரது அபார ஆட்டம் காரணமாக பஞ்சாப்பை தமிழ்நாடு தோற்கடித்தது.

இதேபோல இமாச்சலப் பிரதேச அணிக்கு எதிராக நடந்த போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் கெய்க்வாட் அதிரடியாக ஆடி சதமடித்தார். இவர் 109 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 102 ரன்கள் எடுத்தார். தங்களது 3 தொடக்க ஆட்டக்காரர்களும் விஜய் ஹசாரே போட்டியில் சதமடித்து அற்புதமாக ஆடி வருவது ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading 3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை