ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது.
புனேவில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில், ராஜஸ்தான் மற்றும் சென்னை அணி மோதியது. இதில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் தொடக்க வீரர்களாக வாட்சன் மற்றும் ராயுடு களமிறங்கினர். இவர்களில் ராயுடு 12 ரன் எடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து வாட்சனுடன் ரெய்னா இறங்கினார்.
இவர்களின் அதிரடி ஆட்டத்தால், சென்னை சூப்பர் கிங்ஸ்ன் ரன்கள் குவிந்தது.
குறிப்பாக, வாட்சன் 28 பந்தில் அரை சதம் அடித்தார். 57 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா 29 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தனர்.
இவர்களை தொடர்ந்து வந்த, டோனி 5 ரன்களும், பில்லிங்ஸ் 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. பிராவோ 24 ரன்களும், ஜடேஜா 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால், கடினமாக இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.3 ஒவரில் 140 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதில், பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, பட்லர் 22, கேப்டன் ரகானே, உனத்காட் தலா 16, பின்னி 10 ரன்கள் எடுத்தும், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்தும் ஆள் அவுட்டாகினர். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 64 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதையடுத்து, செஞ்சுரி அடித்த வாட்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.