ராயுடு, ரெய்னா அதிரடி - தப்பி பிழைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் பெற்றி பெற்றது.

by Lenin, Apr 23, 2018, 19:05 PM IST

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் பெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் ஐபிஎல்2018 போட்டியின் 20 லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. முன்னதாக இரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்திருந்தது.

இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்திருந்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய சென்னை அணியில் ஷேன் வாட்சன் 9 ரன்களிலும், பாஃப் டு பிளஸ்ஸி 11 ரன்களிலும் வெளியேற 32 ரன்களுக்குள் முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா இணை ஹைதராபாத் அணியை வெளுத்து வாங்கியது. குறிப்பாக ராயுடு அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். இறுதியில், 37 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகள் உட்பட 79 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. சுரேஷ் ரெய்னா 43 பந்துகளில் 54 ரன்களுடனும், தோனி 12 பந்துகளில் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கி புவியும், தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே இருவரும் டக் அவுட் ஆனார்கள். தீபக் ஹூடா 1 ரன்னில் வெளியேற ஹைதராபாத் 22 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், இதற்கெல்லாம் அசராத கேப்டன் கேன் வில்லியம்சன் அட்டகாசமாக ஆடினார். 35 பந்துகளில் அரைச்சதம் விளாசினார் கேன் வில்லியம்சன். ஒரு பக்கம் ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.

யூசுஃப் பதான் களமிறங்கினார். வழக்கம் போல அவரது ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து ஆடினார். ஆனால், தசை பிடிப்பு காரணாமாக அவரால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சிரமப்பட்டார். இதற்கிடையில் சிறப்பாக ஆடிக்கொண்டு இருந்த கேன் வில்லியம்சன் 51 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்து வெளியேறினார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் பதான் சிக்ஸர் அடித்தார். நான்காவது பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், சென்னை எளிதில் வெற்றிபெறும் நினைத்த போது, ரஷீத் கான் களமிறங்கினார்.

வந்ததும் ஒரு சிக்ஸர் விளாச ஆட்டம் மீண்டும் பரபரப்பானது. இதனால், இந்த ஓவரில் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. இரண்டாவது இரண்டு ரன்கள். மூன்றாவது பந்தில் ஒரு ரன்.

ரஷீத் கான் பேட்டிங் முனைக்கு வந்தார். மூன்று பந்தில் 16 ரன்கள் தேவை. நான்காவது பந்தில் சிக்ஸரும், ஐந்தாவது பந்தில் பவுண்டரியும் விளாச கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக பந்துவீசிய பிராவோ ஒரு ரன் மட்டும் விட்டுக்கொடுக்க சென்னை 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ராயுடு, ரெய்னா அதிரடி - தப்பி பிழைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை