IPL கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
14 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, குவிண்டன் டி காக் களமிறங்கினர். 2 வது ஓவரில் 2 ரன்கள் மட்டும் எடுத்து குயின்டன் டி காக் அவுட் ஆனார். இதையடுத்து, ரோஹித்துடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். 3-வது ஓவரில் ஹர்பஜன் வீசிய பந்துகளை 3 முறை பவுண்டரியை நோக்கி விளாசினார் சூர்யகுமார் யாதவ். பேட் கம்மின்ஸ் பந்தில் சிக்ஸர் அடித்த சூர்யகுமார் 33 வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடிய ரோஹித் சர்மா, கம்மின்ஸ் பந்தில் 43 ரன்களில் போல்டானார். அடுத்து களம் இறங்கிய ஹார்திக் பாண்டியா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்தது.
கடைசி ஓவரில் குருணால் பாண்டியா முதல் 2 பந்துகளை பவுண்டரியை நோக்கி தட்டி விட்டதால், மும்பை அணி 150 ரன்களை எட்டியது. ஆனால் அடுத்த பந்தில் வீழ்ந்தார். அடுத்தடுத்த பந்தில் ஜாஸ்பிரீத் பூம்ராவையும், கடைசி பந்தில் ராகுல் சஹாரையம் வீழ்ந்தனர்.
இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா தரப்பில் ஆண்ட்ரே ரசல் 5 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், பிரசித், ஷகிப், வருண் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பில் நிதிஷ் ராணா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். சிறப்பான தொடக்கம் தந்த இந்த ஜோடியில் சுப்மன் கில் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 ரன்களிலும், கேப்டன் இயான் மோர்கன் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்தை மைதானத்தின் நான்காபுறமும் விளாசிய அரைசதத்தை பதிவு செய்திருந்த நிதிஷ் ராணா 57 ரன்களில் அவுட் ஆனார்.
ஷாகிப் அல் ஹசன் 9 ரன்களில் வெளியேற தினேஷ் கார்த்திக் மற்றும் ஆண்ரே ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில் ஆண்ரே ரசல் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பேட் கம்மின்ஸ் டக்அவுட் ஆனார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 8 ரன்களும், ஹர்பஜன் சிங் 2 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் கொல்கத்தா அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் சாஹர் 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது.