பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
14 IPL கிரிக்கெட் தொடரின் 8 வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.
பஞ்சாப் அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் முதல் ஓவரில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 5 ரன்கள் எடுத்து 3 வது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களம் இறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டம் இழக்க, சாருக்கான் நிதானமாக ஆடினார். அரைசதத்தை நெருங்கிய சாருக்கான் 47 ரன்களில் அவுட் ஆனார்.
இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சாருக்கான் 47 ரன்கள் அடித்திருந்தார். சென்னை அணியில் அதிகபர்சமாக தீபக் சாஹர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னையின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டு ப்ளிசிஸ் உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். இருவரும் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து முருகன் அஸ்வின் வீசிய 13 வது ஓவரில் மொயின் அலி 46 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா 8 ரன்களில் அவுட்டாகி வெளியேற, இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய டு ப்ளிசிஸ், அணியை வெற்றியடை செய்தார்.
சென்னை அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 107 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு ப்ளிசிஸ் 36 ரன்களும், சாம் கர்ரன் 5 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.