ஐபிஎல் போட்டிகளில் நடுவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் கள நடுவர்கள் அளிக்கும் பெரும்பாலான தீர்ப்புகள் சர்ச்சைகளாகவே உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்-சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஒரே ஓவரில் 7 பந்துகள் வீசப்பட்டன.
சென்னை வீரர் ஷர்துல் தாகூர், ஹைதராபாத் வீரர் வில்லியம்சனுக்கு நோ-பாலாக (இடுப்புக்கு மேல் புல்டாஸ்) வீசினார். எளிதாக கணிக்கக் கூடிய இந்த தவறான பந்துவீச்சை (நோ-பால்) கள நடுவர்கள் இருவரும் கணிக்கவில்லை.
இதனால், அந்த பந்தை நோ-பாலாக நடுவர்கள் அறிவிக்கவில்லை. வேகப்பந்துகள் தலைக்கும் மேல் செல்லும் போது பவுன்சர் நோ-பாலாக அறிவிக்கப்படுவதில்லை, வைடுகளிலும் பல சர்ச்சைகள் மூண்டு வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் சேர்மன் ராஜிவ் சுக்லா நடுவர்கள் கவனம் சிதறாமல் பொறுப்புடன் பணியாற்றுமாறும், சர்ச்சையான முடிவுகளுக்கு போட்டி நடுவர் ஆலோசனை செய்து முடிவை பரிசீலனை செய்யலாம் என அறிவுரை வழங்கியுள்ளார்.