திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - 205 ரன்களை ஊதி தள்ளிய தோனி

by Lenin, Apr 26, 2018, 12:28 PM IST

தோனியின் அதிரடியால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் 2018ஆம் ஆண்டின் 25ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 18 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டி வில்லியர்ஸ், குவிண்டன் டி காக் இணை சென்னை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தனர். பின்னர் குவிண்டன் டி காக் 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வெளியேறினார். அபாரமாக ஆடிய டி வில்லியர்ஸ் 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதனால், பெங்களூரு அணி 14.5 ஓவர்களில் 142 ரன்கள் குவித்தது.

ஆனால், பின்னர் வந்த வீரர்களில் மன்தீப் சிங் மட்டும் 32 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் இமாலய ஸ்கோரை நோக்கி சென்ற பெங்களூரு அணி சற்று குறைந்த ஸ்கோரை எட்டியது.

அதன் பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில், ஷேட் வாட்சன் 7, சுரேஷ் ரெய்னா 11, சாம் பில்லிங்ஸ் 9, ரவீந்திர ஜடேஜா 3 என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 74 ரன்களுக்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அற்புதமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது தோனி களமிறங்கினார். தோனி களமிறங்கியதும் ஆட்டத்தில் சூடு பிடித்தது. சிக்ஸரும், பவுண்டரியுமாக மைதானத்தில் உள்ளவர்கள் வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தினர்.

அவருக்கு உறுதுணையாக அம்பதி ராயுடுவும் வாண வேடிக்கை காட்டினார். கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரை தோனியும், பவுண்டரியை ராயுடுவும் விளாசினார். இந்நிலையில் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ராயுடு ரன் அவுட் ஆனார். அவர் 53 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 82 ரன்கள் எடுத்தார்.

இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் மூன்று வைடுகள், ஒரு சிக்ஸர் உட்பட 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட பிராவோ ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார்.

பிறகு ஒரு ரன் தட்டிவிட தோனி பேட்டிங் முனைக்கு வந்தார். வழக்கம்போல அவரது பாணியில் ஒரு சிக்ஸர் பறக்கவிட சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த தோனி, 34 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading திரும்பி வந்துட்டேன்னு சொல்லு - 205 ரன்களை ஊதி தள்ளிய தோனி Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை