`எனக்கு 25 வயது ஆவது போல்தான் உணர்கிறேன்’ என்று தன் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். 2012-ம் ஆண்டு சச்சின் தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். ஆனால் இன்றளவும் அவர்தான் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் முடிசூடா மன்னராக இருக்கிறார்.
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான சச்சின் தற்போது ராஜ்ய சபா எம்.பி-யாகவும் இருக்கிறார். மேலும், பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் சச்சின் தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அப்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன் அவரை ஒரு சிறப்புப் பேட்டி கண்டார். பேட்டியின் போது லக்ஷ்மன், `பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின். உங்களுக்கு இன்று 45 வயதாகிறது. ஆனால், இன்றும் நீங்கள் கட்டுமஸ்தாகவே இருக்கிறீர்கள்.
எப்படி இது சாத்தியம்?’ என்று கேட்டதற்கு சச்சின், `ஏனென்றால் எனக்கு 25 வயது ஆவது போலவே உணர்கிறேன். மீதமுள்ள 20 ஆண்டுகள் என்பது எனது அனுபவம்’ என்று தன் இளமையின் ரகசியம் குறித்து விளக்கினார். அவர் மேலும், `கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் என் வாழ்க்கை மிக சுவாரஸ்யமானதாகவே சென்று கொண்டிருக்கிறது.
எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் குறை சொல்வதற்கில்லை. சில நேரங்களில் நான் செய்யும் வேலைகள் என்னை களைப்படையச் செய்யும். யுனிசெப் தூதுவர், ராஜ்ய சபா எம்.பி, ஸ்வச் பாரத் தூதவர் என பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்து கொண்டிருக்கிறேன். ஆனாலும் இளமையுடனும் துடிப்புடனுமேயே இருக்கிறேன்’ என்றார் நிறைவாக.