’தோற்றாலும் ஜெயித்தாலும் இந்திய கிரிக்கெட் அணிதான் எப்பவும் கெத்து’ என பெருமிதத்துடன் கூறியுள்ளார் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி சமீபத்தில் தனது சுயசரிதைப் புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தக வெளியீட்டின் பின்னர் பல தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ’இந்திய அணி, 2019 உலகக் கோப்பையை கைப்பற்றுமா?’ என்ற கேள்விக்கு அவர் சற்று வித்தியாசமாகவே பதிலளித்துள்ளார். கங்குலி கூறுகையில், “இந்திய அணி தோற்றாலும் ஜெயித்தாலும் கிரிக்கெட் என்றால் இந்திய அணிதான் எனப் பெருமிதமாகவே சொல்வேன். ஏனெனில் தரமும் இந்திய அணியின் கலாச்சாரமும் எப்பவும் ஸ்பெஷல்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “கிரிக்கெட் அணிகளில் இந்த அணிதான் பெஸ்ட் எனக் கூற முடியாது. சூழ்நிலைகள் மாறுபடலாம். ஆனால், எதுவாயினும் கிரிக்கெட் ரசிகர்களின் ஆல்-டைம் ஃபேவரைட் பட்டியலில் இந்திய அணிதான் டாப். எங்கள் இந்திய அணி சச்சினைக் கண்டுள்ளது. கோலியையும் கண்டுள்ளது” எனப் பெருமிதமாகக் கூறினார்.
இவ்விழாவில் கங்குலியுடன் சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பங்கேற்று 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணிக்குத்தான் சொந்தம் என்று உறுதிபடக் கூறினர்.