'இங்கிலாந்தின் ஐபிஎல்’ என்று அழைக்கப்படும் கவுண்டி கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஒண்ணும் கோடிகளில் சம்பளம் இல்லை என பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். பெங்களுரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகப் பட்டையைக் கிளப்பி வரும் கோலி, விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் லீக் தொடர் ஒன்றிலும் விளையாட உள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது ஐபிஎல் போட்டிகளில் பெங்களுரூ சாலஞ்சர்ஸ் அணியில் விளையாடுவதற்காக கோலி 18 கோடி ரூபாய் சம்பளமாகப் பெறுகிறார். இந்திய ஐபிஎல் போட்டிகளுக்காகவே கோடிகளில் வாங்கும் விராட், இங்கிலாந்து தொடருக்காக சர்ரே அணியிடம் வெயிட்டாக வாங்காமலா இருப்பார்? என்ற கேள்வி பரவத் தொடங்கியது.
இதற்கு விளக்கமளித்துள்ள பிசிசிஐ, “விராட் கோலி கவுண்டி தொடரில் விளையாடுவதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகவில்லை. அவருக்கு பயணச்செலவு, இருப்பிடச்செலவு மற்றும் சாதாரண ஒரு நாள் போட்டிகளுக்கு வழங்கப்படும் சம்பளமே வழங்கப்படுகிறது” எனக் கூறியுள்ளது.
ஜூன் மாதம் முழுவதுமாக கவுண்டி தொடரில் விளையாடும் விராட் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பங்குபெறும் டெஸ்ட் தொடரில் பாதியில் கோலி இணைந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.