’விராட் கோலி இந்திய அணிக்காக விளையாடுவதைவிட கவுண்டி தொடருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்’ என இங்கிலாந்து வீரர் ஒருவர் விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் ஐபிஎல் எவ்வளவு பிரபலமோ அதுபோல், இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி தொடர் வெகு பிரபலம். அந்தக் கிரிக்கெட் தொடரில் கவுண்டி சர்ரே அணிக்காக ஜூன் மாதம் முழுவதும் விளையாடுவதற்காக விராட் கோலி ஒப்பந்தமாகியுள்ளார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அதே ஜூன் மாதத்தில்தான் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகளில் கோலி கேப்டனாக விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கவுண்டி தொடர், கோலி ஜூன் மாதம் முழுவதும் எங்களுக்குத்தான் என அறிவித்துள்ளபோது, அதே ’ஜூன் மாதத்தில் வரும் அயர்லாந்து தொடரில் கேப்டன் கோலி இந்தியாவுக்காக எப்படி விளையாடுவார்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரையில் கோலி தரப்பிலிருந்தோ பிசிசிஐ தரப்பிலிருந்தோ தரப்படவில்லை. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் டேவிட் கோவர் கோலியின் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார்.
முன்னாள் கேப்டனான டேவிட் கோவர் கூறுகையில், “கவுண்டி தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலக்கு பெற்றுள்ளார் கோலி. இது டெஸ்ட் ஆட்டத்தைவிடுத்து கோலியின் டி20 போட்டித்தொடரின் மேலுள்ள ஆர்வத்தைக் காட்டுகிறது.
மேலும், கோலிக்கும் தன் திறன் குறித்து இங்கிலாந்து மண்ணில் நிரூபிக்க வேண்டி உள்ளதே” என்றும் கூறியுள்ளார்.