பல போராட்டங்களுக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரையில் வந்த செரினா வில்லியம்ஸின் வலிமையைக் கண்டு பெருமை கொள்கிறார், செரினா வில்லியம்ஸின் கணவர் அலெக்சிஸ் ஒஹானியன்.
அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ். இவர் அலெக்சிஸ் ஒஹானியன் என்ற தனது நீண்ட கால காதலரை சென்ற ஆண்டு திருமணம் செய்தார். அதற்கு முன்னதாக இத்தம்பதியினருக்கு ஒலிம்பியா என்ற பெண் குழந்தை பிறந்தது.
அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை, பிரசவம், அதன் பின்னர் செரினாவின் உடல்நிலை சரியில்லாமல் போக, குழந்தை பிறந்த அடுத்த நாளே மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை எனப் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சில மாதங்களிலேயே தன் உடல் அளவிலும் மன அளவிலும் மீட்டு தற்போது விம்பிள்டனின் இறுதிப்போட்டி வரை தேர்வானார் செரினா வில்லியம்ஸ்.
இறுதிப்போட்டியில் தோற்றாலும், தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்த செரிநா வில்லியம்ஸுக்கு உலகமே பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செரினாவின் கணவர் அலெக்சிஸ் ஒஹானியன், "எங்கள் குழந்தை பிறந்த அடுத்த நாளே என் மனைவி செரினாவுக்கு இக்கட்டான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தோம்.
அந்த நொடியில் என் மனைவி மீண்டும் என்னிடம் உயிருடன் திரும்புவாளா எனத் தெரியாத சூழ்நிலை. அவள் திரும்பி வந்தாள் மட்டும் போதும் எனக் காத்திருந்தே. ஆனால், பத்து மாதங்கள் கழித்து இன்று விம்பிள்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் நிற்கிறாள்" எனப் பெருமையுடன் தன் ட்விட்டர் பக்கத்தில் மனைவி செரினாவுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
செரினா வில்லியம்ஸின் டென்னிஸ் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு குழந்தை ஒலிம்பியாவை முற்றிலும் தந்தை அலெக்சிஸ் ஒஹானியன் தான் கவனித்துக்கொள்கிறார் என்பது செரினா தன் கணவர் குறித்துக் குறிப்பிட்ட பாராட்டாகும்.