லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது இந்திய அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது இங்கிலாந்து.
முதல் இன்னிங்ஸில் முரளி விஜய், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் ரன் எதுவும் எடுக்கவில்லை. அஸ்வின் அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்திருந்தார். மொத்தத்தில் 107 ரன்கள் சேர்ந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் ரன் எதுவும் எடுக்கவில்லை. அஸ்வினே அதிகபட்சமான 33 ரன்களை எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்கள் மட்டுமே இந்தியா எடுத்தது. முதலாவது இன்னிங்ஸை 396/7 என்ற கணக்கில் டிக்ளேர் செய்தது இங்கிலாந்து.
இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத், இரண்டாவது டெஸ்ட் மூலம் ஒரு சாதனையை செய்துள்ளார். இங்கிலாந்தின் வேகப் பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் (4/23), ஸ்டாட் பிராட் (4/44) என்ற கணக்கில் விக்கெட்டுகளை வீழ்த்தியதால், சுழற்பந்து வீச்சாளரான அடில் ரஷீத்தை பந்து வீசவே அழைக்கவில்லை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். கிறிஸ் வோக்ஸின் முதலாவது டெஸ்ட் சதத்துடன் (137) 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்களை இங்கிலாந்து எடுத்ததும் ஜோ ரூட், டிக்ளேர் செய்தார். அதனால் ஒன்பதாவது பேட்ஸ்மேனாக இருந்த ரஷீத்துக்கு பேட்டிங் செய்யவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸை ஆடுவதற்கு தேவையில்லாமலே ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஆகவே, டெஸ்ட் போட்டியில் பந்து வீசாமல், பேட்டிங் செய்யாமல், கேட்ச் பிடிக்காமல், ரன் அவுட் செய்யாமல் இருந்த வீரராக அடில் ரஷீத், சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 141 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில், இப்படி எதுவும் செய்யாமல் இருந்த 14வது வீரராக அடில் ரஷீத் இடம் பெற்றுள்ளார்.