உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் நேற்று காலமானார்.
1970களில், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றவர் அஜித் வடேகர் (77). இந்திய அணிக்கு பல போட்டிகளில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை தேடி தந்தவர். குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளை அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தினார்.
1964ம் ஆண்டில் இந்திய அணியில் அறிமுகமான அஜித், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சதம் உள்பட 14 அரை சதங்களுடன் 2113 ரன்களை குவித்துள்ளார். பல சாதனைகளை செய்துள்ள அஜித் வடேகர், 1974ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர், மேனேஜர், தேர்வுக்குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் வடேகர் வகித்துள்ளார்.
மும்பையில் வசித்து வரும் அஜித் வடேகர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அஜித் வடேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் வடேகர், நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜூனா விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.