ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
நேற்று மாநிலங்களவையில் முதன் முதலாக மாநிலங்களவை கவுரவ உறுப்பினரான டெண்டுல்கர் பேச முற்பட்டார். பதவியேற்ற பின் முதன் முதலாக பேச முற்பட்டதால் அவரது பேச்சை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, மன்மோகன் சிங்குக்கு எதிராக அவதூறு வெளியிட்ட பிரதமர் மோடி மன்னிப்பு கேட்குமாறு காங்கிரசார் அமளியில் ஈடுபட்டதால், டெண்டுல்கரால் உரையாற்ற முடியவில்லை. இதனால், டெண்டுல்கர் தனது முகநூல் பக்கத்தில் 15 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் கிரிக்கெட்டை அளவுகடந்து நேசிக்கிறேன். கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. எனது தந்தை ரமேஷ் டெண்டுல்கர் எனது வாழ்க்கைக்கு எது தேவையோ அவற்றிற்காக ஆதரவாக இருந்தார். என்னை ஊக்கப்படுத்தினார். விளையாடுவதற்கான சுதந்திரத்தை அளித்ததுதான் அவர் எனக்கு அளித்த மிகப்பெரிய பரிசு. அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நம் நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளன. வறுமை, சுகாதாரம், உணவு பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு விளையாட்டு வீரராக, விளையாட்டு மற்றும் ஆரோக்கியம் பற்றிய பிரச்சனையை பேச விளைகிறேன். இந்தியாவை விளையாட்டை விரும்பும் நாட்டிலிருந்து விளையாட்டில் பங்கேற்கும் நாடாக மாற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம்.
உலகிலேயே இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் தான் 75 மில்லியன் மக்கள் நீரிழிழு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் பிரச்சனை உள்ள நாடுகளில் 3ஆவது இடத்தில் இந்தியா உள்ளது.
பள்ளிகளில் விளையாட்டை ஒரு பாடமாக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதைப் போல ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.