ஆசிய கோப்பை தொடரின் முதலாவது சூப்பர் - 4 ஆட்டத்தில் பங்களாதேஷை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
துபாயில் நடைபெற்று வரும் 14வது ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று சூப்பர் – 4 சுற்று தொடங்கியது. இதன் முதலாவது போட்டியில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களை எதிர் கொள்ள முடியாமல் திணறிய பங்களாதேஷ் 49.1 ஓவர்கள் தாக்குப் பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
174 ரன்கள் என்ற வெற்றி இலக்கை சேசிங் செய்ய இந்திய அணி தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானும் பாகிஸ்தானை பந்தாடியது போலவே பங்களாதேஷையும் பந்தாடினர்.
கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 83 ரன்கள் விளாசி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 104 பந்துகள் விளையாடி இறுதி வரை ஆட்டமிழக்காத ரோகித் சர்மா 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசினார்.
40 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷிகர் தவான் ஷகிப் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 13 ரன்களுக்கு வெளியேற பின்னர் களமிறங்கிய தோனி அதிரடியாக விளையாடி 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் ஒரு ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 36.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.
மேன் ஆப் தி மேட்ச்:
15 மாதங்கள் கழித்து இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்கள் அபாரமாக பந்துவீசி, வெறும் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா எளிதில் வெற்றி பெற வழிவகுத்தார். அவருக்கு ஆட்ட நாயக விருது வழங்கப்பட்டது.