14வது ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று துபாயில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டி அபுதாபியில் நடைபெற்றது.
இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் பலப்பரிட்சை செய்தன. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்களுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணிகள் 7 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது.
துவக்க ஆட்டக்காரரான லித்தான் தாஸ் 41 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொர்ப்ப ரன்களில் அவுட்டாகினர். இதனால், பங்களாதேஷ் அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியாமல் தத்தளித்தது.
இந்நிலையில், 6வது மற்றும் 7வது இடத்தில் களமிறங்கி பார்ட்னர்ஷிப் அமைத்த இம்ருல் கயேஸ்(72) மற்றும் மஹ்முத்துல்லா(74) ஜோடி அபாரமாக விளையாடி இருவரும் அரை சதம் கடந்து பங்களாதேஷ் அணிக்கு ஒரு வலுவான ஸ்கோரை கொடுத்தனர்.
250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான முகமது ஷாசாத் 53 ரன்கள் எடுத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தார். ஆனால், அவருடன் யாரும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்க முடியாமல், சிங்கிள் டிஜிட் ரன்களில் அடுத்தடுத்து 2 பேட்ஸ்மேன்கள் அவுட்டாகினர்.
பின்னர் களமிறங்கிய ஹஸ்மத்துல்லா ஷாயிதி அதிரடி காட்டி 71 ரன்கள் எடுத்தார். மோர்டசா பந்துவீச்சில் அவர் போல்ட் ஆன பின்னர், அந்த அணி சோபிக்க தவறியது.
இருந்தபோதும், ரன்கள் சீராக உயர்ந்தது. வெற்றி பெறப் போகிறோம் என்ற சூழலில் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சென்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இறுதி ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி பங்களாதேஷ் த்ரில் வெற்றியை தனதாக்கியது.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றி பெறும் வாய்ப்பை தவறவிட்டது.
சிறப்பாக பந்துவீசிய பங்களாதேஷ் கேப்டன் மோர்டஸா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஸ்டபிஸுர் ரஹீமும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாளை இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் அடுத்த சூப்பர் 4 மேட்சில் விளையாடுகிறது. ஏற்கெனவே பைனலுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. புதனன்று நடைபெறவுள்ள பாகிஸ்தான் - பங்களாதேஷ் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்தியாவுடன் செப்.,28ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.